கரூர் மக்கள் நீதிமன்றத்தில் 63 வழக்குகளுக்கு தீர்வு
கரூர், குளித்தலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 63 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவானது நேற்று நுகர்வோர் வழக்குகளுக்கு என தனித்துவமான மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. மேலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் தொழிலாளர் நலன் சம்பந்தமான வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்டன. கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு அமர்விலும், குளித்தலை நீதிமன்றத்தில் ஒரு அமர்விலும் என மொத்தம் 2 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன.
63 வழக்குகளுக்கு தீர்வு
இந்த அமர்வுகளில் மொத்தம் 85 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு 63 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வழக்குகளுக்கான மொத்த தொகை ரூ.4 கோடியே 95 லட்சத்து 17 ஆயிரத்து 131 ஆகும்.
இதில் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தினை கரூர் மாவட்ட குடும்ப நல நீதிபதி எழில் தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், பார் அசோசியேசன், அட்வகேட் அசோசியேசன் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் மற்றும் வழக்காடிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம் செய்திருந்தார்.