பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையம் அமைக்கரூ.1½ கோடி ஒதுக்கீடு;அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையம் அமைக்க ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2022-12-29 18:02 GMT

நாகர்கோவில்,

பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையம் அமைக்க ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

தேசிய அளவிலான கருத்தரங்கு

குமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தேன் தொடர்பான சாத்திய கூறுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு நாகர்கோவில் இந்து கல்லூரியில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேற்கு தொடர்ச்சி மலை என்பது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். மேற்குத்தொடர்ச்சி மலையில் பல்லுயிர் பெருக்கம் அதிகளவில் இருப்பதாக யுனெஸ்கோவால் பாராட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் இயற்கையாகவே தேனீ வளர்ப்புக்குரிய தேன் மற்றும் மகரந்தத்தை தரக்கூடிய தாவரங்களை கொண்ட சிறப்பு பெற்றுள்ளது. இதன் காரணமாக தேனீ வளர்ப்பு 1920 -ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ரூ.1½ கோடி ஒதுக்கீடு

மார்த்தாண்டம் தேனீ பெட்டிகள் உற்பத்தியிலும், தேன் உற்பத்தி செய்வதிலும் முன்னோடியாக திகழ்கிறது. பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையம் அமைப்பதற்கு ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேனீ மகத்துவ மையம் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சியை அளிக்கும் தொழில்நுட்ப நிறுவனமாக செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குமரித்தேன்

அதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் பேச்சிப்பாறையில் தேனீ மகத்துவ மையத்தில் உற்பத்தி செய்யப்படும் தேன் 'குமரித்தேன்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தினர். விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனீ வளர்ப்பு குறித்த கையேட்டினையும் அவர்கள் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கத்தின் உதவி ஆணையர் (புதுடெல்லி) மனோஜ் குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சுந்தர் டேனியல் பாலஸ், இந்துக் கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு, மேல்புறம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆஸ்லின் ஜோஸி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டப் பகுதிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்