கோவை
கோவை தொழில் அதிபர் வீட்டில் தங்க கட்டி திருடு போன வழக்கில் வேலைக்கார பெண்ணின் மகனையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் தங்க கட்டியை மீட்டனர்.
தொழில்அதிபர்
கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 46). தொழில் அதிபர். சம்பவத்தன்று இவரது வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 கிராம் தங்க கட்டிகள் திருடு போனது. இவற்றின் மதிப்பு ரூ.12½ லட்சம் ஆகும். தங்க கட்டி காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொழில்அதிபர் வீட்டில் நகை திருடியது அங்கு பணிபுரிந்த வேலைக்கார பெண்ணான அருள் ஜோதி என்பது தெரியவந்தது. இவர் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர்.
மகன் கைது
இதையடுத்து ஜோதியை நேற்றுமுன்தினம் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 93 கிராம் தங்க கட்டியை மீட்டனர். தொடர்ந்து மீதமுள்ள தங்க கட்டியை எங்கு மறைத்து வைத்து உள்ளார் என்பது குறித்து போலீசார் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.இதில் ஜோதியின் மகன் சவுந்தர் (27) என்பவரிடம் மீதம் உள்ள தங்க கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சவுந்தரை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிராம் தங்க கட்டியை மீட்டனர். தொடர்ந்து சவுந்தரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.