நலிந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்
பிய்ந்து போன செருப்பை தைத்து பயன்படுத்தாமல் அதை தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பு வாங்கி அணிவதால் செருப்பு தைக்கும் தொழில் நலிந்து வருகிறது.;
பிய்ந்து போன செருப்பை தைத்து பயன்படுத்தாமல் அதை தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பு வாங்கி அணிவதால் செருப்பு தைக்கும் தொழில் நலிந்து வருகிறது.
புதிய வகை செருப்புகள்
நமது கால் பாதங்களை பாதுகாப்பதில் காலணி (செருப்பு) முக்கிய பங்காற்றுகின்றது. சாலைகள், காடுகள், கரடு முரடான பகுதிகளில் நடந்து செல்கையில் முட்கள், கற்கள், கம்பி, கண்ணாடி துண்டுகள் போன்ற கூர்மையான பொருட்கள் எதிர்பாராதவிதமாக கால் பாதங்களில் குத்தி ரத்தத்தை வரவழைத்து விடும். அதில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக செருப்புகள் திகழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலவகை மாடல்களில் மட்டுமே செருப்புகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. மேலும் அந்த நேரத்தில் அவற்றின் விலை அதிகமாகவே இருந்தது. எனவே பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் செருப்புகள் பிய்ந்து போனால் மீண்டும், மீண்டும் தைத்து பயன்படுத்தி வந்தனர்.
அதனால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நகரின் முக்கிய பகுதிகள், தெருக்களின் ஓரம் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வரிசையாக அமர்ந்து செருப்பு தைப்பது, ஷூவிற்கு பாலீஷ் போடுவது என்று மிகவும் பிசியாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது பல்வேறு மாடல்களில் செருப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு வகையான செருப்புகள் குறைந்த விலைக்கு விற்பனையாகின்றன. எனவே செருப்புகள் லேசாக அறுந்து போனால் கூட உடனடியாக அதனை தூக்கி எறிந்து விட்டு புதிய செருப்பை வாங்கி பயன்படுத்தும் கலாசாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது.
நலிவடைந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்
பிய்ந்து போன செருப்பை தைத்து போடுவதை கவுரவ குறைச்சலாக கருதும் எண்ணம் பெரும்பாலான நபர்களிடம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக செருப்பு தைக்கும் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. அதனால் இந்த தொழிலில் ஈடுபட்ட சிலர் போதிய வருமானம் இன்றி வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். எனவே தற்போது பிய்ந்து போன செருப்பை தைத்து பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு உதவித்தொகை
வேலூர் கோட்டை காந்திசிலை அருகே செருப்பு தைக்கும் தொழிலாளி, முள்ளிபாளையம் திடீர்நகரை சேர்ந்த மூர்த்தி ஆறுமுகம்:-
நான் கடந்த 30 வருடங்களாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன். 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாநகராட்சியில் சுமார் 100 பேர் வரை இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்பொழுது சுமார் 40 முதல் 50 பேர் மட்டுமே வேலை செய்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு செருப்பு தைக்க ரூ.5 வரை வாங்கினோம். தற்பொழுது செருப்பு, ஷூக்கள் தைப்பதற்கு ரூ.10 முதல் ரூ.40 வரை வாங்குகிறோம். முன்பு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து ஷூக்களுக்கு பாலீஷ் போட்டுக்கொண்டு செல்வார்கள். ஆனால் தற்போது அனைவரும் சுயமாகவே ஷூக்களுக்கு பாலீஷ் செய்வதால் வாடிக்கையாளர்கள் வருகை அரிதாகி விட்டது.
ஒருநாளில் 2 அல்லது 3 பேர் மட்டுமே பாலீஷ் போட வருகிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் குறைந்த விலைக்கு பல்வேறு மாடல்களில் செருப்புகள் கிடைக்கின்றன. அதனால் செருப்பு பிய்ந்து போனால் உடனடியாக புதிய செருப்பு வாங்கி விடுகிறார்கள். இதனால் எங்களுக்கு தினமும் 200 ரூபாய் கிடைப்பதே கடினமாக உள்ளது. இதனால் இந்த தொழிலில் ஈடுபட்டிருந்த பலர் வேறு வேலைக்கு சென்று விட்டனர். செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இலவச வீட்டுமனை பட்டா
வேலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் செருப்பு தைக்கும் வேலூர் சம்பத்நகரை சேர்ந்த சந்திரா:-
எனது கணவர் ஆறுமுகம் செருப்பு, பேக்குகள் தைக்கும் தொழில் செய்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் அவருக்கு உதவி செய்வதற்காக செருப்பு, பேக்குகள் தைப்பது, ஷூக்களுக்கு பாலீஷ் போடுவதை நானும் கற்றுக் கொண்டேன். அவர் இறந்த பின்னர் இந்த தொழிலை செய்து வருகிறேன். இந்த தொழிலில் சுமார் 25 ஆண்டு கால அனுபவம் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரே பெண் நான் மட்டுமே. ஷூக்களுக்கு பாலீஷ் போடுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 வாங்கினேன். தற்பொழுது ரூ.20 முதல் ரூ.30 வரை வாங்குகிறேன். மலிவு விலையில் செருப்புகள் விற்பனை செய்யப்படுவதால் எங்களின் தொழில் நலிவடைந்து விட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் தொழில் மேலும் பாதிப்படைந்து விட்டது. மிகக்குறைந்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மானியத்துடன் கடன்
ஆற்காடு பஸ் நிலையம் அருகே செருப்பு தைக்கும் பழனி (54) கூறியதாவது:-
எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பழைய செருப்புகளை தைப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை வருமானம் கிடைக்கிறது. மழைக்காலங்களில் தொழில் பாதிக்கப்படுகிறது. அன்றைய தினம் வருமானம் இன்றி வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும். தற்போது யாரும் பழைய செருப்புகளை தைத்து போடுவதில்லை. அதனால் செருப்பு தைக்கும் தொழிலை நம்பி குடும்பம் நடத்த முடியவில்லை. அதனால் நான் பலமுறை அரசு உதவி வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அரசு எந்த விதமான சலுகையும் வழங்கவில்லை. வறுமையில் வாடும் எங்களைப் போன்ற செருப்பு தைக்கும் தொழிலாளிகளுக்கு அரசு மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூர் கோர்ட்டு அருகில் செருப்பு தைக்கும் கடை வைத்திருக்கும் சங்கர் (62) கூறியதாவது:-
எனது தந்தை செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். அவரை தொடர்ந்து நான் கடந்த 40 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். கொரோனா காலத்திற்கு முன்பு செருப்பு தைக்கும் தொழில் நன்றாக இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு ரூ.200 வருமானம் பார்ப்பதே மிகவும் கடினமாக உள்ளது. தற்போது மக்கள் யாரும் செருப்பு தைப்பதற்காக கடைக்கு வருவது கிடையாது. செருப்பு பிய்ந்து போனால் அதை தூக்கி வீசிவிட்டு புதிதாக வேறு ஒரு செருப்பு வாங்கிக் கொள்கின்றனர். அதனால் இந்த தொழில் அழிந்து விடும் நிலைக்கு சென்று விட்டது.
இதனால் நாங்கள் பிழைப்பு நடத்துவது கடினமாகிறது. தெருவோர கடை வியாபாரிகளுக்கு ரூ.10,000 வட்டியில்லா கடன் வழங்க அரசு உத்தரவிட்டது. அதனையும் வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலையை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி சுப்பிரமணி:-
பல வருடங்களாக செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகின்றேன். முன்பெல்லாம் செருப்புக்கு பணத்தை செலவு செய்வதா என்ற மனநிலையில் மக்கள் பிய்ந்த செருப்பை தைத்து பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைக்கு நினைத்த நேரத்தில் புதிய செருப்பை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதேபோல் வீட்டிலேயே ஷூவிற்கு பாலீஷ் போட்டு கொள்கிறார்கள். அதனால் செருப்பு தைக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது. செருப்பு தைக்க யாராவது வரமாட்டார்களா? என்று எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த தொழிலில் போதிய வருவாய் இல்லாமல் பலர் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். வரும் காலங்களில் செருப்பு தைக்கும் தொழில் இருக்குமா? என்பதே சந்தேகம்தான். போதிய வருவாயின்றி நலிந்து வரும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு பண்டிகை நாட்களில் சிறப்பு உதவித் தொகை வழங்க வேண்டும் என்றார்.