சென்னையில் 3 அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குக்கு தனி வார்டு - மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-09-16 02:55 GMT

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பருவகால காய்ச்சல்களும், நோய் பாதிப்புகளும் தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 120-ஐ தாண்டியுள்ளது. இதேபோல, நாள்தோறும் 15 முதல் 20 வரை பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தலா 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக 65 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், இதில், கொசுவலை வசதிகளுடன் கூடிய 20 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளோருக்கு 24 மணி நேரம் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கஞ்சி, உப்பு சர்க்கரை கரைசல் நீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் ஆகியோருக்கு காய்ச்சல் சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்