சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கட்டிட கழிவுகளை கொட்ட தனி இடம் ஒதுக்கீடு

குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்ட 15 மண்டலங்களில் 15 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-07-22 09:50 GMT

சென்னை,

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டுமே கட்டிடக் கழிவுகளை கொட்ட வேண்டும் என்றும், இதை மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019ன்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

"சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 15 இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். இதை மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் துணை விதிகள் 2019-ன்படி அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் 1 டன் அளவிற்கு குறைவான கட்டிடக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது ரூ.2,000-மும், அதற்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000-மும் அபராதம் விதிக்கப்படும். குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டிடக் கழிவுகளை கொட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் விவரம் வருமாறு:-

1. திருவொற்றியூர் பக்கிங்ஹாம் கால்வாய் சாலை, சாத்தங்காடு, திருவொற்றியூர்

2. மணலி காமராஜ் சாலை, மணலி (மண்டல அலுவலகம் -2 அருகில்)

3. மாதவரம் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், இரவு காப்பகம் அருகில், மாதவரம் பேருந்து முனையம் பின்புறம்

4. தண்டையார்பேட்டை வடக்கு அவென்யூ சாலை, மகாகவி பாரதி நகர், வியாசர்படி

5. இராயபுரம் கால்நடை டிப்போ (பகுதி), அவதான பாப்பையா சாலை, சூளை (சென்னை மாநகராட்சி பள்ளி எதிரில்)

6. தி.ரு.வி.க.நகர் ஜமாலியா (பழைய லாரி நிலையம்) பெரம்பூர் நெடுஞ்சாலை

7. அம்பத்தூர் மாணிக்கம் பிள்ளை தெரு, அம்பத்தூர்

8. அண்ணாநகர் முதல் பிரதான சாலை, ஷெனாய் நகர் (கெஜ லட்சுமி காலனி அருகில்)

9. தேனாம்பேட்டை லாயிட்ஸ் காலனி (மாநகராட்சி ஐ.டி.ஐ நிறுவனம் அருகில்)

10. கோடம்பாக்கம் குருசிவா தெரு.எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை கோடம்பாக்கம் (ஆர்10 எம்.ஜி.ஆர். காவல் நிலையம் அருகில் )

11. வளசரவாக்கம் நடராஜன் சாலை சந்திப்பு மற்றும் பாரதி சாலை (ராமாபுரம் ஏரி அருகில்)

12. ஆலந்தூர் கிருஷ்ணா நகர் பிரதான சாலை, ஒத்தவாடை மயானபூமி அருகில்

13. அடையாறு வேளச்சேரி மயானபூமி, வேளச்சேரி பிரதான சாலை, குருநானக் கல்லூரி அருகில்

14. பெருங்குடி 200 அடி ரேடியல் சாலை, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம்

15. சோழிங்கநல்லூர்கங்கை அம்மன் கோவில் தெரு விரிவு, காரப்பாக்கம் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் அருகில்)

மேலும், 20 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக கட்டிடக் கழிவுகளை உருவாக்குபவர்கள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மறுபயன்பாட்டு மையங்களுக்கு கட்டிடக் கழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு கட்டிடக் கழிவுகளை அனுப்புவதற்கு முன் உரிய கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்திய பிறகு கட்டிடக் கழிவுகள் கொட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படும்.

சென்னை மாநகராட்சி மண்டலங்களில் உள்ள 15 இடங்களில் நாள்தோறும் சராசரியாக 750 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஜனவரி 2022 முதல் ஜூன் 2022 வரை பொது இடங்களில் கட்டிடக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.27,37,119 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்