சேலம் அருகே மருத்துவ மாணவி சாவு வழக்கு:'என்னை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன்'கைதான ஐ.டி. ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்

சேலம் அருகே மருத்துவ மாணவி தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவருடைய காதல் கணவரான ஐ.டி. ஊழியர் கைதானார். அவரை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன் என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2023-09-25 20:36 GMT

ஓமலூர்

சேலம் அருகே மருத்துவ மாணவி தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவருடைய காதல் கணவரான ஐ.டி. ஊழியர் கைதானார். அவரை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன் என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மருத்துவ மாணவி கொலை

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் கம்போஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் கேசவராஜி. இவருடைய மகள் கோகிலவாணி (வயது 20). இவர் சேலம் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமலூர் அருகே ஜோடுகுளி புலி சாத்து முனியப்பன் கோவில் பகுதியில் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மாணவியை கொலை செய்ததாக அவருடைய காதல் கணவர் என்று கூறிக்கொண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் (24) என்பவர் தனது தாயாருடன் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பரபரப்பு வாக்குமூலம்

இதையடுத்து மருத்துவ மாணவியை கொலை செய்ததாக முரளி கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நான் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். நான் வசித்து வந்த பகுதியில் கொலை செய்யப்பட்ட கோகிலவாணியின் தாய் வழி உறவினர்கள் குடும்பம் உள்ளது. அவர்களுடன் நான் நட்பாக பழகி வந்தேன்.

இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, கோகில வாணியின் உறவினர்கள், என்னை சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்காக அழைத்தனர். அவர்கள் அழைப்பை ஏற்று நான் மேச்சேரி கோவில் திருவிழாவிற்கு சென்ற போது, பள்ளி மாணவியாக இருந்த கோகிலவாணியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இருவரும் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டோம். ஒரு கட்டத்தில் எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. நாங்கள் இருவரும் 'அலைபாயுதே' பட பாணியில் திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டிலேயே வாழலாம் என்று திட்டமிட்டோம்.

திருமணம்

இதையடுத்து நாங்கள் இருவரும் கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். அப்போது சேலம் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த அவர், அவரது பெற்றோர் வீட்டிலேயே இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். ஆனால் அலைபாயுதே பட நாயகி போன்று நான் கட்டிய தாலியை மறைத்து அவர் வீட்டில் வாழ்ந்து வந்தாலும் என்னுடன் செல்போனில் நாள்தோறும் பேசி வந்தார். போனிலேயே உருக உருக பேசி வாழ்ந்து வந்த நிலையில், சமீபகாலமாக எனது காதல் மனைவியின் பேச்சில் சற்று மாற்றம் ஏற்பட தெரிந்தது.

அவருடைய வீட்டில் எங்கள் காதல் விவகாரம் தெரிந்து எதிர்ப்பு தெரிவித்ததால் தான் என்னை தவிர்த்து வருகிறார் என்று நினைத்தேன். இது தொடர்பாக அவரிடம் பேசி விளக்கம் கேட்க அவருடைய போனை தொடர்பு கொண்ட போது நம்பர் பிசி, பிசி என்று வந்தது. அப்போது தான் அவர் போனை கட் செய்து என்னை தவிர்த்து வருகிறார் என்பதை உணர்ந்தேன். இதனால் காதல் திருமணம் அவருக்கு பிடிக்காமல் என்னை விட்டு விலகுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனால் என்னை ஒதுக்கி வரும் எனது காதல் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

ஓட்டலில் சாப்பிட்டோம்

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நான், எனது காதல் மனைவியிடம் கடைசியாக ஒரு முறை காதல் திருமணம் பற்றி பேசி முடிவு எடுக்க செல்போனில் பேசி அழைத்தேன். அவரும் சேலம் 5 ரோடு பகுதிக்கு வந்தார். அதற்கு முன்பாக அவரை கொலை செய்யும் நோக்குடன் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்து கொண்டேன். பின்னர் நாங்கள் இருவரும் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டோம்.

அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஜோடுகுளி புலி சாத்து முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றோம். அங்கு எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே பேக்கில் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் ஸ்குரு கழட்டும் கூர்மையான கட்டர் மற்றும் சிறிய அளவிலான கத்தியால் கோகிலவாணியின் கழுத்தில் சரமாரியாக குத்தினேன்.

பெட்ரோல் ஊற்றி எரித்தேன்

இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை யாருக்கும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அவர் முகத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டேன். அதன்பிறகு எனது மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு சென்று விட்டேன்.காதல் மனைவியை எரித்துக்கொன்ற மன உறுத்தலில் எனது தாயாாரிடம் இது பற்றி கூறி கதறி அழுதேன். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த எனது தாயார் தான் என்னை போலீசில் சரண் அடைய அழைத்து வந்தார்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட முரளி கிருஷ்ணன் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்