மூத்த குடிமக்களின் தேவை என்ன?

Update: 2023-04-02 18:45 GMT

அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசியமான பொருளாக இன்று மருந்துகள் மாறிவிட்டன. ஒவ்வொரு குடும்பத்திலும் உணவுப்பொருட்களுக்காக ஒதுக்கும் பட்ஜெட்டில் மருந்தும் மறக்காமல் இடம்பிடித்து கொள்கிறது. இந்தநிலையில், அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை கடந்த 1-ந் தேதி முதல் 12 சதவீதம் வரை உயர்ந்தது.

இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவோர்கள் மூத்த குடிமக்கள் தான். காரணம் நிறையப் பேர் வருமானம் இல்லாமலும், போதுமான சேமிப்புகள் இல்லாமலும், ஓய்வூதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டி வருபவர்களாகவும்தான் இருக்கின்றனர். வயதானாலே கூடவே இணை நோய்களும் வந்து விடுகின்றன.

அதுமட்டுமா? கொரோனா பரவிய காலத்தில் முதியவர்களுக்கு குறிப்பாக ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் வழங்கப்பட்டு வந்த ரெயில் கட்டண சலுகையும் பறிக்கப்பட்டுவிட்டது. அதேபோல் கடன் பத்திரங்கள் மூலம் முதியவர்கள் செய்யும் சேமிப்புகளுக்கு 10 சதவீத வருமானவரி விலக்குச் சலுகையும் கடந்த 1-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது. வங்கிகளில் இன்சூரன்ஸ் திட்டங்கள் ரத்து, வருங்கால வைப்பு நிதி மூலம் அளிக்கப்படும் ஓய்வூதியம் குறைப்பு இப்படி ஒவ்வொன்றும் தங்களுக்கு பாதகமாக நடப்பதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் கருத்துகள் வருமாறு:-

முதியோர்களுக்கு ஆறுதல்

சென்னை அண்ணாநகரை சேர்ந்த 82 வயதான முதியோர் நல டாக்டர் வி.எஸ்.நடராஜன்:-

வயது ஆக, ஆக நோய்களும் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் நோய்கள் வந்தால் 10 நாட்களுக்கு மருந்து சாப்பிட்டால் போதும், ஆனால் தற்போது வரும் நோய்களுக்கு ஆண்டு கணக்கிலோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளதால் மருத்துவ செலவும் அதிகரிக்கிறது. எனவே முதியவர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அரசு அளிக்கும் ஓய்வூதியத்தை வைத்துதான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். முதியோர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும், வங்கிகளில் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டும் ஆங்காங்கே காணப்படும் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களை கிராமப்புறங்களிலும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். முதியோர் நலன் பிரிவை அனைத்து மாவட்ட தலைநகர் மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளிலும் தொடங்க வேண்டும். நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை ரேஷன் கடைகளிலேயே முதியவர்களுக்கு இலவசமாக வழங்கலாம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் அரசே காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் முதியவர்களுக்கு நிமோனியா ஊசியை இலவசமாக போட வேண்டும். இதுவே முதியோர்களின் தேவையும், எதிர்பார்ப்புமாக இருப்பதுடன், முதியவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும்.

ரஷியாவை பின்பற்றுமா?

கான்பூர் ஐ.ஐ.டி. விண்வெளி பொறியியல் துறை பேராசிரியர் (ஓய்வு) மற்றும் ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக சிறப்பு பேராசிரியருமான இ.ராதாகிருஷ்ணன்:-

மூத்த குடிமக்கள் விவகாரத்தில் ரஷியாவை போன்று நம்முடைய அரசு பின்பற்ற வேண்டும். அங்கு மூத்த குடிமக்களின் சேமிப்புக்கு 12 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்றவர்களிடம் வருமான வரி செலுத்த நிர்பந்திக்க கூடாது. மாறாக வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகைகள் வழங்க வேண்டும். அதேபோல், முதியவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே சேர்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு அங்கு பஸ் கட்டணத்தில் சலுகையாக பாதித்தொகை செலுத்தினால் போதும். அதில் முதியோரின் மனைவி அல்லது துணைக்கு ஒருவரையும் அழைத்து செல்லலாம். இதேபோன்று இங்கும் போக்குவரத்து துறையில் முதியவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்.

அரசு மீது நம்பிக்கை

பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி:-

லட்சக்கணக்கான குடும்பத்தினர் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் இந்த நிலையில் மருந்து பொருட்களின் விலை உயர்வு மேலும் அனைவரையும் பாதிக்கும். முதியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் கருதி செயல்பட்டு வரும் நம்முடைய மாநில அரசு இந்த விலையை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு சில இடங்களில் பெற்றோர்களை வீடுகளில் கவுரவமாக வைத்து பிள்ளைகள் பார்ப்பதில்லை. இதனால் மருந்து மாத்திரைகளை நம்பியே முதியவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு நலன் புரியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கடுமையாக பாதிக்கும்

மாரண்டஅள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ராஜசேகர்:-

அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. மூலப் பொருட்கள் விலை உயர்வால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த விலை உயர்வு ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஆனால் வருவாய் குறைந்த முதியவர்கள் சில நாட்களுக்கான மருந்துகளை கூட வாங்கி வைத்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே மருந்து விலை உயர்வு இத்தகைய வருவாய் குறைந்த முதியவர்களை கடுமையாக பாதிக்கும். இதற்கு தீர்வு காண மருந்துகளின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு வந்து செல்லும் முதியவர்களுக்கு மருந்துகள் தேவையான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

முதியோர் நல சிகிச்சை பிரிவு

தர்மபுரியை சேர்ந்த முதியோர் நல டாக்டர் இளங்கோவன்:-

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வருவாய் குறைந்த மூத்த குடிமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். வயது ஆக, ஆக நோய்களும் அதிகரித்து வருகின்றன. முன்பெல்லாம் நோய்கள் வந்தால் ஒரு சில வாரங்களுக்கு மட்டும் மருந்து சாப்பிட்டால் போதும். ஆனால் தற்போது வரும் நோய்களுக்கு ஆண்டு கணக்கிலோ அல்லது வாழ்நாள் முழுவதுமோ மருந்து சாப்பிட வேண்டிய நிலை உள்ளதால் மருத்துவ செலவும் அதிகரிக்கிறது. எனவே முதியோர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும், வங்கிகளில் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களை கிராமப்புறங்களிலும் அதிக எண்ணிக்கையில் திறக்க வேண்டும். முதியோர் நல சிகிச்சை பிரிவை மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளிலும் தொடங்க வேண்டும்.

மீண்டும் சலுகைகள்

தர்மபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகோபால்:-

மூத்த குடிமக்களில் பெரும்பாலானோர் தேவையான பொருளாதார வசதி இல்லாதவர்களாக உள்ளனர். ஆனால் இவர்களுக்கு வயது மூப்பு காரணமாக பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இவ்வாறு நோய் பாதிப்பு ஏற்படும்போது தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெறுவதற்கான வசதி கணிசமானவர்களுக்கு இருப்பதில்லை. அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு முதியவர்களை பாதிக்கும். எனவே இந்த விலை உயர்வை அரசு குறைக்க வேண்டும். வங்கிகளுக்கு செல்லும் மூத்த குடிமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதை தவிர்க்க வங்கிகளில் முதியோர்களுக்கு தனியாக வரிசை அமைத்து அவர்களுடைய தேவைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த சலுகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

மருத்துவ காப்பீடு

ஏரியூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முத்துசாமி:-

மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் நிலையான வருமானம் இல்லாத முதியவர்கள் கடும் பாதிப்பை சந்திக்கிறார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய நோய் பாதிப்புகள் பரவலாக மாறிவிட்ட பின் அவற்றிற்கு தொடர் சிகிச்சை எடுக்க பெரிய தொகையை செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் மருந்துகள் விலை உயர்வதால் உரிய சிகிச்சைகளை பெற முடியாமல் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் மூத்த முடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். முதியவர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும். ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்தில் முதியவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும். மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் மக்கள் மருந்தகங்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் தொடங்கப்பட வேண்டும்.

முதியோர் உதவித்தொகை

எண்டப்பட்டியை சேர்ந்த மூதாட்டி அக்குமாரி:-

கடந்த சில ஆண்டுகளாக பணக்காரர்கள், உழைக்கும் மக்கள் என்ற வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு நோய்கள் வருகின்றன. இதனால் வசதி வாய்ப்பற்ற ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு அரசு ஆஸ்பத்திரிகளில் முதியவர்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை தகுதி உள்ள அனைத்து ஏழை எளியவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர பகுதிகளில் இருப்பவர்களை போலவே கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் இப்போது பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் முதியவர்களுக்கு தேவையான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விலையை குறைக்க வேண்டும்

தர்மபுரியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ராஜேந்திரன்:-

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவை பெரும்பாலான முதியவர்களை பாதிக்கும் நோய்களாக மாறிவிட்டன. இந்த நோய் பாதிப்பிற்கு தினமும் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட வேண்டிய நிலை உருவாகிவிட்டது. வசதி படைத்தவர்கள் பணக்காரர்களுக்கு தேவையான மருந்துகளை வாங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த முதியவர்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை தொடர்ந்து வாங்க முடியாமல் பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு மருந்துகளின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விற்பனை பாதிக்கப்படும்

பாலக்கோட்டை சேர்ந்த மருந்தக உரிமையாளர் அசோக்குமார்:-

இன்றைய காலகட்டத்தில் முதியோர்களுக்கு உணவைப்போல் மருந்துகளும் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டன. அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. மருந்துகள் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு மருந்துகள் மீதான வரியை குறைத்தால் சாதாரண மக்களும் தங்களுக்கு தேவையான மருந்துகளை ஓரளவுக்கு வாங்கி பயன்படுத்த முடியும். மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்தால் மருந்துகளின் வழக்கமான விற்பனையும் பாதிக்கப்படும்.

800 வகையான மருந்துகள்

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை முகவர்கள்:-

இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நிர்ணயம் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மருந்து விலையை திருத்தி வருகிறது. இந்த நிலையில், மூலப்பெருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவினம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இதனை ஏற்று அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை கடந்த 1-ந் தேதி முதல் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இவை பொதுமக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்