பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரம்

Update: 2023-05-26 19:28 GMT

ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க, புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்

தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையில் இருக்கின்றனர். வருகிற ஜூன் 1-ந்தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து நீடிக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படுமா? என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்தநிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 7-ந் தேதி திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது.

பாடப்புத்தகங்கள்

பள்ளிகள் திறந்தவுடன் முதல்நாளே மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்கள், தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தற்போது தஞ்சையில் இருந்து லாரிகளில் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள 213 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப்பிரிவு பள்ளிகளுக்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

அதிகாரிகள் கருத்து

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் சார்பில் கடந்த சில மாதங்களாக புத்தகங்களை அச்சிட்டு மாவட்டம் வாரியாக அனுப்பி வைத்தது. அதன்படி தஞ்சை கல்வி மாவட்டத்துக்கு வந்த புத்தகங்கள் மேம்பாலம் அரசு பள்ளி வளாகத்தில் இறக்கிவைக்கப்பட்டது. தற்போது ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

எனவே, மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அனைத்தும் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி புத்தகங்களை கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கே நேரிடையாக அனுப்பி வருகிறோம். அதே போல் மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகள், எழுதுப் பொருட்களும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் புத்தகங்கள் வழங்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்