தமிழகம் முதன்மை மாநிலமாக மாற ஊராட்சிப்பகுதிகள் அனைத்தும் தன்னிறைவு பெற சிறப்பாக செயல்பட வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை

தமிழகம் முதன்மை மாநிலமாக மாற ஊராட்சிப் பகுதிகள் தன்னிறைவு பெற சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.

Update: 2022-08-26 14:30 GMT

கருத்தரங்கம்

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஊராட்சி நிர்வாகம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏற்றத்தாழ்வு இன்றி

நமது மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். தாங்கள் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இன்றி வழங்கப்பட்ட பதவிக்கான வேலையினை சரியாக மேற்கொண்டால் தங்கள் ஊராட்சி வளர்ச்சி பெறும். எனவே ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவரும் தங்கள் பகுதிக்கான ஊராட்சி செயலாளருடன் அவ்வப்போது கலந்தாலோசித்து ஊராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும். வார்டு உறுப்பினர்களின் கோரிக்கைகளையும் நீங்கள் கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றித்தர வேண்டும்.

தன்னிறைவு பெற வேண்டும்

ஊராட்சியில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, பொதுகழிப்பறை வசதி, வீட்டுமனைப்பட்டா, பஸ் போக்குவரத்து வசதி, சுடுகாட்டு வசதி உள்ளிட்டவற்றை முதலில் நிறைவேற்றுவதன் மூலமே மக்களிடம் நன்மதிப்பை பெற முடியும். அதன் பின்னர் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர்ந்திடும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் நிதியை நியாயமான முறையில் பெற்று ஊராட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தமிழகம் முதன்மை மாநிலமாக மாற ஊராட்சிப்பகுதிகள் அனைத்தும் தன்னிறைவு பெறவேண்டும். அதற்காக ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். தங்கள் பணிகளில் கணவரோ, உறவினரோ தலையிடாமல் பார்த்துக்கொள்வதுடன் பெண்கள் தன்னிச்சையாக சரியான பாதையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கருத்தரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்