செம்புளிச்சாம்பாளையம்செல்லியாண்டி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.;
அந்தியூர்
அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த 12-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தன. மேலும் 60 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்யப்பட்டது. பின்னர் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பவானி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் காவிரி தீர்த்தம் எடுத்துக் கொண்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மன் சிலை முன்பு தீர்த்தம் குடம் வைக்கப்பட்டது. இதில் ஒரு தீர்த்த குடம் ஏலம் விடப்பட்டது. இதனை பக்தர் ஒருவர் ரூ.366-க்கு ஏலம் எடுத்தார். அந்த குடத்தில் இருந்த காவிரி தீர்த்தத்தை கொண்டு தேங்காயில் எரிய விடப்பட்டது.
தொடர்ந்து குண்டம் விழா நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டும், தலையில் அரளி பூவை சுற்றிக்கொண்டும் கையில் பிரம்புடன் ஒருவர் பின் ஒருவராக சிறுவர் முதல் பெரியவர் வரை தீ மிதித்தனர். மேலும் ஆண்களும், பெண்களும் உடலில் அலகு குத்திக்கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். அதன்பின்னர் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்தும், மாவிளக்கு எடுத்தும் வந்தனர்.