கிருஷ்ணா நதிநீர் வரத்தால் முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ழுழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் ஏரியை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2022-06-21 05:12 GMT

செம்பரம்பாக்கம் ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி ஆகும். தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு வெளுத்து வாங்கிய மழையால் ஏரிக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது. இந்த ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் 92 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இதனால் கிருஷ்ணா நதி நீருடன் மழைநீரும் சேர்ந்து ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 23.5 அடியாக(மொத்த உயரம் 24 அடி) இருந்தது. ஏரிக்கு 1,700 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. நீர் இருப்பு 3 ஆயிரத்து 475 மில்லியன் கன அடியாக இருந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் 95.34 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 205 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முழு கொள்ளளவு

இதனால் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் ஏரிக்கு வரும் கிருஷ்ணா நதிநீரை நிறுத்தவும், ஏரியின் நீர்மட்டத்தை 23.50 அடியில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் பெயரை கேட்டாலே கடந்த கால நிகழ்வுகளால் சென்னை வாழ் மக்களுக்கு குறிப்பாக அடையாறு ஆற்றங்கரை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொஞ்சம் அச்சம் தான். 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. கடல் போல் காட்சி அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.

62 சதவீதம் இருப்பு

அதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 29.31 சதவீதமும், சோழவரம் ஏரியில் 12.21 சதவீதமும், புழல் ஏரியில் 92.36 சதவீதமும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 86 சதவீதமும், வீராணம் ஏரியில் 8.16 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 61.65 அதாவது 62 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.) தற்போது 8 ஆயிரத்து 151 மில்லியன் கன அடி (8.15 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்