இயற்கை உரம் என கூறி களிமண் விற்பனை
திருச்சுழி பகுதியில் இயற்கை உரம் என கூறி களிமண் விற்பனை செய்தவர்கள் மீது விவசாயிகள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
திருச்சுழி,
திருச்சுழி பகுதியில் இயற்கை உரம் என கூறி களிமண் விற்பனை செய்தவர்கள் மீது விவசாயிகள், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இயற்கை உரம்
திருச்சுழி அருகே வடக்குநத்தம் கிராமத்தில் இயற்கை உரத்தை சிலர் விற்பனை செய்தனர். இயற்கை உரம் போடுவதால் அதிக மகசூல் கிடைக்கும் என அவர்கள் கூறினர். இதை நம்பிய விவசாயிகள் ஒரு மூடை ( 50 கிலோ ) ரூ.1,300-க்கும் கொடுத்து வாங்கி உள்ளனர்.
வீட்டிற்கு சென்று மூடைகளை பிரித்து பார்த்த போது விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். களி மண்ணை இயற்கை உரம் என கூறி அந்த நபர்கள் விவசாயிகளை ஏமாற்றியது தெரியவந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
திருச்சுழி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உரக்கடைகளில் உரங்கள் இருந்தாலும் செயற்கையான தட்டுப்பாடுகள் ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு உரங்கள் விற்று வருகின்றனர்.
போலீசில் புகார்
இதனைக்கருத்தில் கொண்டு கிராமங்களில் குறைந்த விலைக்கு இயற்கை உரம் தருவதாக கூறியதால், நாங்கள் அதனை நம்பி ஒரு நபர் 10 மூடைகளுக்கு மேல் வாங்கி விட்டோம்.
தற்போதுதான் களிமண் என்று தெரிகிறது. விவசாயத்திற்காக கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை கொடுத்து ஏமாற்றி விட்டோம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் போலியான உரங்களை விற்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து விவசாயிகள் பரளச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.