வத்தலக்குண்டு பேரூராட்சியில் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்; வியாபாரிகள் கோரிக்கை

வத்தலக்குண்டு பேரூராட்சியில் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-09 17:43 GMT

வத்தலக்குண்டு ஒருங்கிணைந்த அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் சடையாண்டி, செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர்கள் சவுந்தரபாண்டியன், இளங்கோவன், துணைச்செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அப்போது அவர்கள், பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்லபாண்டியனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பேரூராட்சி அலுவலகத்துக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கழிவுநீரும், மழைநீரும் கால்வாயில் முறையாக செல்ல முடியாமல் ஆங்காங்கே குளம்போல் தேங்குகிறது. மேலும் கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிடுகிறது. எனவே வத்தலக்குண்டு நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். அத்துடன், ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரையும், கழிவுநீரையும் அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்