வேகப்பந்து வீச்சாளர் சிறப்பு பயிற்சிக்கான வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம் சார்பில், வேகப்பந்து வீச்சாளர் சிறப்பு பயிற்சிக்கான தேர்வு கடலூரில் நேற்று நடந்தது. இதில் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.;

Update:2023-02-20 00:15 IST

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம் சார்பில், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழல் பந்து வீச்சாளர் சிறப்பு பயிற்சிக்கான வீரர்கள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 11 சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.நேற்று 2-வது நாளாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேர்வு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பழனி தலைமையில் நடந்தது. கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் கூத்தரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

600 வீரர்கள் பங்கேற்பு

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களை மாவட்டம் வாரியாக பிரித்து, தேர்வு நடந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தை சேர்ந்த சிறந்த பயிற்சியாளர்கள் வீரர்களை தேர்வு செய்தனர். முதல் கட்டமாக 55 வீரர்களை தேர்வு செய்தனர். அதில் இருந்து இறுதியாக சிறந்த 15 வீரர்களை, அதாவது வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தனர்.முன்னதாக வீரர்கள் காலை 6 மணிக்கே கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வெள்ளை சீருடையுடன் வந்து பங்கேற்றனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு வரிசை எண் வழங்கப்பட்டு, ஒவ்வொருவராக வந்து பந்து வீசி தங்கள் திறமைகளை நிரூபித்தனர். 14 வயது முதல் 24 வயதிற்குள்ளான வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்