அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு: சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு சட்டசபையிலும் எதிரொலித்துள்ளது. அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை தேர்வு செய்துள்ளதாக சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.;
சென்னை,
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினை சட்டசபையிலும் எதிரொலிக்க உள்ளது. அரசியல் ரீதியான கூட்டணிப்படி அ.தி.மு.க.விடம் 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தனியாக அ.தி.மு.க.வுக்கு 65 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். (இரட்டை இலை சின்னத்தில் புரட்சி பாரதம் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றதால் அந்த கட்சி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக கருதப்படுகிறார்).
கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரை நீக்கியதாக அறிவிக்கப்பட்டு இருப்பதால், அந்த 3 பேரையும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களாக கருதக்கூடாது என்று சபாநாயகரிடம் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமியோ அல்லது அந்த கட்சியின் கொறடாவோ கடிதம் கொடுக்கலாம்.
மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரையும் நீக்கிய பிறகு மீதமுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டி, அடுத்த எதிர்க்கட்சி துணைத்தலைவரை தேர்வு செய்து சபாநாயகருக்கு கடிதம் அளிக்க முடியும்.
சபாநாயகர் முடிவு
இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்தும் சபாநாயகருக்கு கடிதம் அளிக்க வாய்ப்பு உள்ளது. தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதில் குறிப்பிடலாம். எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக கோர்ட்டு அல்லது தேர்தல் கமிஷனின் தெளிவான முடிவு வந்த பிறகுதான் இதில் இறுதி முடிவை சபாநாயகர் எடுப்பார் என்றே தெரிகிறது.
தற்போது சட்டசபையில் முதல்-அமைச்சர் இருக்கைக்கு எதிராக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இடம் கொண்ட ஒரே இருக்கையில் அமர்கின்றனர். இந்த இருக்கையை ஒருவருக்கான இருக்கையாக மாற்றும்படியும் கோரிக்கை வைக்கப்படலாம்.
சபாநாயகருக்கு கடிதம்
இந்தநிலையில் நேற்று சபாநாயகருக்கு சட்டசபை செயலாளர் மூலமாக எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், தன்னை அ.தி.மு.க. பொதுக்குழுவில், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்திருப்பதாகவும், அந்த தகவலை இந்திய தேர்தல் கமிஷனிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.