டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 57,960 பேர் எழுதினார்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 242 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 57,960 பேர் எழுதினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் 242 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 57,960 பேர் எழுதினார்கள்.
குரூப்-4 எழுத்து தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி -4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான எழுத்து தேர்வு தர்மபுரி மற்றும் அரூர் கோட்டங்களில் மொத்தம் 179 இடங்களில் அமைக்கப்பட்ட 242 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 66,637 பேருக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டன. இவர்களில் 57,960 பேர் தேர்வை எழுதினார்கள். 8,677 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தர்மபுரி மாவட்டத்தில் இந்த தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு 242 முதன்மை கண்காணிப்பாளர்களும், 3,325 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 242 ஆய்வு அலுவலர்களும், 55 நடமாடும் குழுக்களும், 242 வீடியோ ஒளிப்பதிவாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். துணை கலெக்டர் நிலையிலான 9 பறக்கும் படை குழுக்களும், 7 கண்காணிப்பு அலுவலர்களும், தேர்வு மையங்களில் பாதுகாப்புக்காக 300-க்கும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மேலும் மாவட்டத்தில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி தேர்வு மையம், தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி தேர்வு மையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தேர்வாணைய விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தாசில்தார்கள் ராஜராஜன், பெருமாள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இதேபோன்று தர்மபுரி சப்-கலெக்டர் சித்ரா விஜயன் தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன் மொரப்பூர் பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.