விதிமுறைகளை மீறிய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதாக வந்த புகாரை இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-22 19:06 GMT

புகார்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் செல்வதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அச்சத்திலும், பீதியிலும் சென்று வந்தனர். மேலும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை இளைஞர்கள் அதிவேகமாக ஓட்டி வருவதும், சிலர் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் போன்ற சூழல் இருந்ததால், இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் வாகனங்களை எடுப்பதற்கு பயந்து நடந்தே சென்று வந்த நிலையில், இதுகுறித்த மாவட்ட போலீசாருக்கு புகார் வந்தது.

புகாரின் பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆலோசனையின்பேரில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகிராபானு தலைமையிலான போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார்கள் ஜெயங்கொண்டம் பஸ் நிலைய ரோடு, நான்கு ரோடு, சிதம்பரம் ரோடு, விருத்தாச்சலம் ரோடு, கும்பகோணம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பறிமுதல்

அப்போது அவ்வழியாக விதிமுறைகளை மீறி வந்த மொத்தம் 15-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து போக்குவரத்து போலீஸ் நிலையம் முன்பாக வரிசையில் நிறுத்தி வைத்தனர். பின்னர் வாகன விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,500 வரை அபராதம் விதித்ததுடன், அவர்களுக்கு விபத்தில்லா பயணங்கள் மேற்கொள்ளவும், உயிர் பலி, கால், கை இழப்பை தவிர்க்க வாகனங்களை குடிபோதையில் ஓட்டக்கூடாது, இரண்டு நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது, கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் இயக்க வேண்டும். வாகனத்திற்கு இன்சூரன்ஸ் அவசியம் கட்டியிருக்க வேண்டும்.

வாகனத்தின் ஆவண நகல் அனைத்தும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும் பள்ளி நேரம் மற்றும் கல்லூரி நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வதுக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் வாகனங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்து திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் இதே நிலை நீடித்தால் இதுபோன்று அடிக்கடி வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதில் சிக்கிய 18 வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 2 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்