விராலிமலை ஒன்றியம், ஆவூர் பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டி கடை, பேக்கரி, தேனீர் கடை உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று விராலிமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், சாகுல் ஹமீத் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு சுகாதார அலுவலர்கள் அபராதம் விதித்தனர். தொடர்ந்து கடை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.