இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
கடல் அட்டைகள்
ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரைப்பகுதியில் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனவர் தேவகுமார், வனக்காப்பாளர் ஜான்சன் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அவரை பிடித்து கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேன்களை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட சுமார் 85 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து கடல் அட்டைகளை வைத்திருந்ததாக புலித்தேவன் நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன்(வயது 42) என்பவரை கைது செய்த வனத்துறையினர் கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்து மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.8 லட்சம்
ராமேசுவரம் கடற்கரையில் வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.