குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட3 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
நாமக்கல்லில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
போலீசார் ரோந்து
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் பொது வினியோகத்திட்ட ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நாமக்கல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது நாமக்கல் - திருச்செங்கோடு சாலை கூட்டுறவு கடன் சங்கம் பின்புறம் உள்ள குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அங்கு 62 மூட்டைகளில் சுமார் 3,100 கிலோ பொது வினியோகத்திட்ட ரேஷன் அரிசியை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராஜூவ்காந்தி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது40) என்பவருக்கு ரேஷன் அரிசி பதுக்கல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் ரேஷன்அரிசியை வாங்கி தீவனமாக அரைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.