காட்டுப்பகுதியில் பதுக்கிய 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4½ டன் ரேஷன் அரிசியை கைப்பற்றிய உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;

Update: 2022-10-01 19:47 GMT

சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4½ டன் ரேஷன் அரிசியை கைப்பற்றிய உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரகசிய தகவல்

விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஏழாயிரம் பண்ணை பகுதியில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது ஏழாயிரம்பண்ணை அருகே கங்கர் கோட்டைமால் பகுதியில் துரைராஜ் (வயது 74) என்பவருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் தகரத்தாலான கொட்டகை அமைத்து அதற்கான மின் இணைப்பு பெற்று ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போலீசார் அந்த கொட்டகையில் சோதனை நடத்திய போது அதில் 90 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. மொத்தம் 4½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

போலீசார் முதியவர் துரைராஜிடம் விசாரணை நடத்திய போது ஏற்கனவே அறிமுகமில்லாத நபர்கள் தங்கள் செலவில் கொட்டகை அமைத்துக் கொள்வதாகவும் அதில் அரிசி மூடைகளை வைத்துக்கொண்டு தீபாவளிக்கு பின்பு எடுத்துக் கொள்வதாகவும் இடத்திற்கான வாடகை ஒப்பந்தம் அப்போது போட்டுக் கொள்வதாகவும் தெரிவித்து சென்றனர் என கூறினார். ஆனால் அந்த நபர்கள் எங்கிருந்து வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

வழக்கு பதிவு

இதனை தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே ஏழாயிரம் பண்ணையில் இருந்து கேரளாவுக்கு கடத்த இருந்த 53 மூடை ரேஷன் அரிசியை கடந்த இருதினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். குறிப்பாக கோவில்பட்டியை சேர்ந்த மாணிக்கராஜா என்பவர் சாத்தான்குளத்தைச் சேர்ந்த சர்ச்சில் லேபர் என்பவர் மூலமாக கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூடைகளை கடத்தியது தெரிய வந்தது.

எனவே ஏழாயிரம் பண்ணையை மையமாக கொண்டு கேரளாவுக்கு அரிசி கடத்தல் தொடர்வது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்