அதிக ஒலி எழுப்பிய 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே அதிக ஒலி எழுப்பிய 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் ஏலகிரி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியவாறும் விலை உயர்ந்த 2 மோட்டார் சைக்கிளை இயக்கி வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாகவும், அதிகசத்தம் எழுப்பியவாறும் வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் கார்த்திகேயன் என்பதும், விலை உயர்ந்த சொகுசு இருசக்கர வாகனத்தை ஒரே நிறத்தில் வாங்கி, அதிக சத்தம் எழுப்பும் வகையில் மாற்று சைலனர்களை பொருத்தியிருந்ததும் தெரிய வந்தது. அந்த 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.