குடோனில் பதுக்கி வைத்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நாகர்கோவிலில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.;
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கலெக்டர் உத்தரவு
குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரிலும் கடைகள் மற்றும் ஓட்டல்களில் அதிகாரிகள் பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோட்டார் பகுதியில் மளிகை பொருட்கள் வைக்கும் ஒரு குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.
அதிரடி சோதனை
அதன்பேரில் மாநகராட்சி நகர்நல அதிகாரி விஜயசந்திரன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் கோட்டார் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது.
ரூ.1 லட்சம் அபராதம்
இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த குடோனுக்கு 'சீல்' வைக்கப்பட்டதோடு குடோன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த குடோன் உரிமையாளர், பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருந்ததாக அபராதம் விதிக்கப்பட்டவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நேற்று முன்தினம் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட்டில் உள்ள 3 கடையில் சுமார் 370 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.