கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்தநவக்கிரக கற்கள்
தேவிபட்டினம் பகுதியில் கடல் உள்வாங்கியதால் நவக்கிரக கற்களும் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
பனைக்குளம்,
தேவிபட்டினம் பகுதியில் கடல் உள்வாங்கியதால் நவக்கிரக கற்களும் வெளியே தெரிந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
நவபாஷாண கோவில்
ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தேவிபட்டினம் கடல் பகுதி. இ்ந்த பகுதியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் நவபாஷாண நவக்கிரக கோவில் உள்ளது. ராமபிரானால் பூஜை செய்யப்பட்ட கடலில் அமைந்துள்ள இந்த நவக்கிரக கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்த நவக்கிரக கற்களை பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக கடலுக்குள் பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேவிபட்டினம் பகுதியில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் ஏராளமான பைபர், பாய்மர படகுகள் கடற்கரை மணலில் தரைத்தட்டி நின்றன. நவக்கிரக கோவில் அமைந்துள்ள பகுதியிலும் பல அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடல் நீரில் மூழ்கிய நிலையில் இருக்கும் நவக்கிரக கற்கள் காலை முதல் மதியம் 1 மணி வரை தெளிவாக வெளியே தெரிந்தன. இதனை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.
வழக்கமான நிகழ்வு
இதுபற்றி தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியதும் குறிப்பாக ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வீசும் காற்று காரணமாக கடல்நீர் பகல் முழுவதும் உள்வாங்கி காணப்படும். மீண்டும் மதியத்திற்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பி விடும். இது வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறுவதுதான். இதனால் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று பகல் வரையிலும் தெளிவாக வெளியே தெரிந்த நிலையில் இருந்த நவக்கிரக கற்களும் மதியத்திற்கு பிறகு கடல் நீர் ஏறி சகஜ நிலைக்கு திரும்பியது. இதனால் மீண்டும் கடல் நீரில் பாதி அளவுக்கு மேல் மூழ்கிய நிலையில் நவக்கிரக கற்கள் காணப்பட்டது. இதேபோல் ராமேசுவரம் சங்குமால் கடற்கரை, அக்னிதீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை மற்றும் பாம்பன் கடற்கரை பகுதியில் நேற்று காலை நேரத்தில் கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது. பகல் 12 மணிக்கு பிறகு மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது.