தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா? - டி.டி.வி. தினகரன்

தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தி.மு.க. முன்வர வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-11-16 08:14 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஈர்க்கப்பட்ட முதலீடுகளையும், உருவான வேலைவாய்ப்புகளையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாரா என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கள ஆய்வு எனும் பெயரில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்வு ஒன்றில் பேசும்போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் பத்துலட்சம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகளை ஈர்த்திருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையானது.

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொடங்கி சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுற்றுப்பயணம் செய்து திரும்பி வந்தாரே தவிர, அந்த பயணத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் இன்று வரை வந்ததாக தெரியவில்லை.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின் முதலீடுகளை ஈர்க்கவோ, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவோ எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல், ஊர் ஊராக சென்று ஈர்க்காத முதலீடுகளை ஈர்த்ததாகவும், உருவாக்காத வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் பெருமை பேசி நாடகமாடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசிய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு அதனை நிறைவேற்ற மறுப்பதோடு, ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களை முடக்கியும், பல்வேறு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வரிகளையும், கட்டணங்களையும் பன்மடங்கு உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க.வுக்கு எதிராக சாதாரண பொதுமக்கள் தொடங்கி விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் எதிர்கால இளைய சமுதாயம், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட கொடிய வகை போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களின் விலை மதிப்பில்லாத எதிர்காலத்தை தொலைத்து வருவதாகவும் வெளியாகும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.

எனவே, இனியும் வாக்கு அரசியலுக்காக மக்களை ஏமாற்றாமல், தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வருவதோடு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்