முதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது?தர்மபுரியில் சீமான் கேள்வி
முதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் நியமன பதவியான கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது என்று தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
முதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் நியமன பதவியான கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது என்று தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
உரிமையை கொடுங்கள்
தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலை முன்னெடுத்து பேசுவது நாங்கள் தான். இதனால் மக்கள் மத்தியில் எங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது. இளைய தலைமுறையிடம் பெரிய நம்பிக்கையை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல் வருகிறது. ஆனால் வளர்ச்சி இல்லை. கல்வியை தரமாக கொடுத்து விட்டால் பஸ் பயணத்துக்கு நாங்கள் பணம் செலுத்தி கொள்கிறோம். சலுகை வேண்டாம், உரிமையை கொடுங்கள் என்று கேட்கிறோம்.
கவர்னர் பதவி தேவையில்லை
விளையாட்டு, மதம், கடவுளுக்கு அப்பாற்பட்டது. அதில் மதம், கடவுள் சார்ந்த கோஷங்கள் எழுப்புவது நாட்டை கற்காலத்திற்கு கொண்டு சென்றுவிடும். சாதி, மதம், கடவுள் போன்ற விவகாரங்கள் சட்டென பற்றி கொள்ளக்கூடியவை. அடுத்த தலைமுறை சாதி, மதம், போதை, திரை கவர்ச்சி ஆகியவை அண்ட முடியாத பெரும் நெருப்பாக வர வேண்டும். 8 கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சருக்கு இல்லாத அதிகாரங்கள் நியமன பதவியான கவர்னருக்கு எங்கிருந்து வருகிறது. அரசு கொண்டுவரும் திட்டங்களை ஆதரித்து சட்டமாக்குவது தான் கவர்னரின் பணி. கவர்னர் பதவியே தேவையில்லை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு கூறினார்.
பேட்டியின் போது மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன், தலைமை நிலைய செயலாளர் செந்தில், தர்மபுரி மாவட்ட தலைவர்கள் சந்தோஷ்குமார், ஆனந்த், மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் நேதாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பொதுக்கூட்டம்
இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி தர்மபுரி குமாரசாமிப்பேட்டை வாரியார் திடலில் இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சந்தோஷ் குமார் வரவேற்று பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் பாண்டியன், மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராஜ், மாவட்ட பொருளாளர் நேதாஜி, மாவட்ட செயலாளர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மோகன், கோபி, சிலம்பரசன், சிவக்குமார், கனகராஜ், ரமேஷ், பெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி கோவிந்தன் நன்றி கூறினார்.