அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கக்கோரி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

முதலமைச்சர் திறந்து வைத்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கக்கோரி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Update: 2023-07-13 08:54 GMT

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் காத்பாடா பகுதியில் புதிதாக 1044 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். வண்ணாரப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதே பகுதியில் உள்ள ராம்தாஸ் நகரில் வசிக்கும் பொதுமக்கள், புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்களுக்கு வீடுகளை ஒதுக்க முன்னுரிமை வழங்க வேண்டும். பயனாளிகள் தொகையாக வசூலிக்கும் ரூ.5 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துக்குள் புகுந்து ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஐட்ரீம் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பகுதி மக்களுக்கே வீடுகளை ஒதுக்க முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளிடம் வசூலிக்கப்படும் முன்பணத்தை ரத்து செய்வது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்