வரப்பில் நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்
சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு வரப்பில் நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.;
சீர்காழி:
சீர்காழி பகுதி விவசாயிகளுக்கு வரப்பில் நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இலவசமாக மரக்கன்றுகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண் நிலங்களில் பசுமை போர்வைக்கான இயக்கம் திட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான மரக்கன்றுகள் வழங்குவதற்கு 33 ஆயிரம் மரக்கன்றுகள் இலக்கு பெறப்பட்டுள்ளது.
வயலில் உள்ள வரப்பில் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் 160 மரக்கன்றுகள் 1 எக்டர் வரப்பு பரப்பிற்கும், மற்றும் வயல் முழுவதும் நடவு செய்வதற்கு 500 மரக்கன்றுகள் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டர் பரப்பிற்கும் இலவசமாக வழங்கப்படும்.
உழவன் செயலியில் பதிவு செய்யலாம்
விவசாயிகள் தாங்களே உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். எனவே இதனை பயன்படுத்தி சீர்காழி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.