விதை விற்பனை உரிமங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும்
விதை விற்பனை உரிமங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என அதிகாரி தெரிவித்தார்.;
அறந்தாங்கி கோட்டத்தில் நெல், உளுந்து, நிலக்கடலை, தென்னங்கன்றுகள், காய்கறி நாற்றுகள், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் இவற்றை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்பவர்கள், கட்டாயம் விதை விற்பனை உரிமம் பெற்று விற்பனை மேற்கொள்ள வேண்டும். இதுவரை அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலமாக விண்ணப்பித்த விற்பனையாளர்கள் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் 5 ஆண்டுகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய விதை விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விதை கொள்முதல் தென்னங்கன்றுகள் மற்றும் நாற்றுகள் விவரங்களை, விதை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நாற்றுகளை விற்பனை செய்யும்போது பயிர் ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விவரங்களுடன் விவசாயிகளின் கையொப்பத்துடன் ரசீது வழங்க வேண்டும். உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும்போது, அவற்றின் ரகம், விலை குறிப்பிட்டு ரசீது வழங்கி இருப்பு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும். விதை விற்பனை நிலையம் முன்பு, நிலையத்தின் பெயர் பலகையும், விதை இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய இருப்பு பலகை முழு விவரங்களுடன் வைக்க வேண்டும். விதைச்சட்ட விதிகளை பின்பற்றாமல், விதிகளை மீறி விற்பனை செய்யும் விதை விற்பனையாளர்கள் மீது விதை சட்ட விதிகள் 1966 மற்றும் விதை விதிகள், 1968-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தரமான விதைகள், தென்னங்கன்றுகள் மற்றும் நாற்றுகளை விவசாயிகளுக்கு விற்பனை மேற்கொள்ள புதிய லைசென்ஸ் பெற விரும்புபவர்கள் தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த விதை வளாகத்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்து, விதை கட்டுப்பாடு ஆணை, 1983 கீழ் புதிய லைசென்ஸ் பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து தங்களின் விதை விற்பனை உரிமத்தை உரிமம் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 5 ஆண்டுகள் முடியும் தேதியில் காலக்கெடுவுக்குள் புதுப்பிப்பு தொகையாக ரூ.500 மட்டும் செலுத்தி அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதை விற்பனை உரிமத்தினை புதிப்பித்து விதை சட்ட விதிகளை பின்பற்றி தரமான விதை வினியோகம் மேற்கொள்ள வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.