பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எவ்வாறு தடுப்பது குறித்து ஒத்திகை நடைபெறும். இந்த ஒத்திகை வருடம் வருடம் பெயர் மாற்றப்பட்டு வருவது வழக்கம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆப்ரேஷன் அம்லா என்றும், கடந்த வருடம் சாஹர் கவாச் என்றும் பெயர் சூட்டப்பட்டது. அதே போல் இந்த வருடம் சீ விஜில்-19 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு கடல் பாதுகாப்பு என்று பொருள். இந்த ஒத்திகை புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் நேற்றும், இன்றும் என 2 நாட்கள் நடைபெறுகின்றன. இதனால் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் கட்டுமாவடி, விச்சூர், கோட்டைப்பட்டினம், ஏம்பக்கோட்டை, சேமங்கோட்டை, அரசங்கரை என 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வாகனத்தின் பதிவு எண் சரியாக உள்ளதா என்று சரிபார்த்த. பின்னர் வாகனம் செல்ல அனுமதித்தனர். கடல் பகுதிகளில் கடலோர காவல் குழுமத்தினர் ரோந்து படகின் மூலம் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் மீனவர் அடையாள அட்டை மற்றும் படகு உரிமம் உள்ளதா என்று பரிசோதனை செய்து அனுமதிக்கின்றனர். மீனவர்களிடம் சந்தேகம் படும்படி யாரும் மீன்பிடித்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார், கடலோர காவல் குழுமம், வருவாய்த்துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு துறையினர் என சுமார் 300 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திடீரென கடலோர பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து போலீசார் தெளிவுப்படுத்தினர்.