பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்
பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது.
இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர். அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஆனால் புதிதாக மதிப்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 10-ந் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டன. பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன.
அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன. இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவு துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ந் தேதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன. அதன் காரணமாக அந்த இணையதளம் https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.