'தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும்'- அமைச்சர் முத்துசாமி பேச்சு

‘தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும்’ என்று அமைச்சர் முத்துசாமி கூறினாா்.

Update: 2023-09-09 22:44 GMT

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் உள்ள இடங்கள் நமது மாணவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.

கொரோனா

ஈரோடு-பெருந்துறை மெயின் ரோட்டில் நந்தா மருத்துவக்கல்லூரி கட்டிட திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவமனைகள் ஒரு சமூகத்துக்கு மிகவும் பயனுள்ளவை. கடந்த கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவமனைகளின் அத்தியாவசிய தேவை குறித்து நாம் உணர்ந்து கொண்டோம்.

வேதனையான அனுபவம்

கொரோனாவின் முதல் அலையின் போது தி.மு.க. ஆட்சியில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம். அப்போதும் தினமும் 24 மணி நேரமும் யாராவது செல்போனின் மருத்துவ உதவி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆஸ்பத்திரி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்று கண்ணீரோடு கோரிக்கை வைப்பார்கள். நாங்கள் முயற்சி செய்து ஒரு படுக்கை கண்டுபிடிக்க ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். படுக்கை தயார் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைக்கும்போது எதிர்முனையில் அவர் இறந்து விட்டார் என்ற பதில் வரும். இப்படிப்பட்ட வேதனையான அனுபவங்கள் தொடர்ந்து ஏற்பட்டது.

இந்த நேரத்தில்தான் தற்போதைய முதல்-அமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளாகிய எங்களுக்கு ஒரு கட்டளையிட்டார். வீடுகளில் முடங்கிக்கிடக்கும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டும் என்றார். ஈரோடு தெற்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. நிர்வாகிகள் இணைந்து ரூ.5 கோடி வரை திரட்டி, அனைத்து மக்களுக்கும் கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கினோம்.

மருத்துவ இடங்கள்

தேர்தலுக்கு பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போதும் கொரோனா 2-வது அலை கடுமையாக மக்களை பாதித்தது. அந்த நேரத்தில் ஆஸ்பத்திரிகளின் முக்கியத்துவம் உணர்ந்து பெருந்துறை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 40 நாட்களில் 1,200 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியை உருவாக்கினோம். அதற்கு ஈரோடு டாக்டர்கள், தொழில் அதிபர்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள்.

இந்தியாவிலேயே மருத்துவப்படிப்புக்காக அதிக இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மாணவ-மாணவிகளுக்கு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்