இலவசங்களை தவிர்த்து மருத்துவத்திற்கும், கல்விக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் திங்கள்சந்தை ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு

இலவசங்களை தவிர்த்து மருத்துவத்திற்கும், கல்விக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என திங்கள்சந்தையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.;

Update: 2022-08-21 18:30 GMT

திங்கள்சந்தை, 

இலவசங்களை தவிர்த்து மருத்துவத்திற்கும், கல்விக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என திங்கள்சந்தையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட கடற்கரை மணலை மணவாளக்குறிச்சியில் உள்ள அரசு மணல் ஆலைக்கு வழங்குவதை கண்டித்தும், குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்துவதை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் திங்கள்சந்தையில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைைம தாங்கி கண்டன உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள மலை வளம் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. கடல் மணல் வளம் மத்திய அரசின் ஆலைக்கு வழங்கப்படுகிறது.

எனவே, குமரி மண்ணின் மலை வளத்தையும், கடல் வளத்தையும் பாதுகாக்கவே இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறோம்.

இலவசத்தை தவிர்க்க வேண்டும்

இலவசங்கள் கொடுக்கக்கூடாது என்று இப்பொழுது அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அதை வலியுறுத்தி பேசி வருகிறேன். இலவசத்தை தவிர்த்து விட்டு மருத்துவத்திற்கும், கல்விக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.

தேங்காப்பட்டணத்தில் மீன்பிடி துறைமுகம் முழுமையாக கட்டமைக்கப்படாமல் திறந்து வைத்ததால் இதுவரை 27 மீனவர்கள் இறந்துள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், நாம்தமிழர் கட்சியின் மாணவர் பாசறையை சேர்ந்த ஆலிஸ் பாத்திமா, மகளிர் பாசறை காளியம்பாள், மாநில மகளிர் பாசறை சீத்தா, மாநில ஒருங்கிணைப்பாளர் ஹிமாயூன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் சரவணன், மாநில இளைஞர் பாசறை ஹிம்லர் உள்பட பலர் பேசினர்.

இதில் குமரி மாவட்ட கடற்கரையில் இருந்து மணல் அள்ளுவதற்காக 1,144 எக்டேர் நிலத்தை கையகப்படுத்தி மத்திய அரசின் மணல் ஆலைக்கு கையளிக்க இருக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் புற்று நோய் ஆராய்ச்சி மையம் மற்றும் அதிநவீன சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், நாகர்கோவில் தொகுதி செயலாளர் விஜயராகவன், துணைத்தலைவர்கள் பிரவின், ஜோசப் சசிகுமார், துணை செயலாளர் முகமது சுஹைல், நாகர்கோவில் மாநகரம் கிழக்கு செயலாளர் சுந்தரேஸ்வரன், நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை செயலாளர் அமலா, இணை செயலாளர் டென்சிலி, துணை செயலாளர் மெஜிலன்ஸ் அருள்மேரி, நாகர்கோவில் மாநகரம் மேற்கு இணைச்செயலாளர் ஜெகன், மாநகரம் கிழக்கு துணை செயலாளர் தினேஷ்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்