நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்விருத்தாசலத்தில் சீமான் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என விருத்தாசலத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

Update: 2022-12-27 21:00 GMT

விருத்தாசலம், 

மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி

விருத்தாசலத்தில் நாம் தமிழர் கட்சியில் மாற்றுக்கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாற்று கட்சியினரை வரவேற்று கட்சியில் புதிதாக இணைந்து கொண்டவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அப்போது 300 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதையடுத்து சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடுமையாக எதிர்ப்போம்

என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. மாற்று இடம் கொடுக்கவில்லை. வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கப்படுகிறது. தமிழக அரசு மக்களுக்கான அரசாக இருந்து போராடி மக்களுக்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும்.

இனிமேல் நிலத்தை கையகப்படுத்தினால் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். கடுமையாக எதிர்ப்போம், போராடுவோம்.

தமிழர்களுக்கு 90 சதவீத வேலைவாய்ப்பு கேட்டோம். ஆனால் 80 சதவீத வேலைவாய்ப்பையாவது தரவேண்டும். ரெயில்வே, என்.எல்.சி. ஆகியவை தமிழகத்தில் இருக்கும்போது தமிழர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

விவசாயிகள் பாதிப்பு

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்கி பொங்கல் பண்டிகைக்கு கொடுப்பார்கள் என நம்பி தான் 40 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிட்டார்கள். திடீரென பண்டிகைக்கு கரும்பு இல்லை என்று கூறும்போது, இதை நம்பி பயிர் செய்த விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

தனித்து போட்டி

பனைப் பயனில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. வேப்பூரில் மட்டும் பனை மரங்கள் வெட்டப்படவில்லை. நாடு முழுவதுமே பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அரசு உடனடியாக தலையிட்டு பனை மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் செயல்பாடு மிக கொடுமையாக இருக்கிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். 20 பெண்களுக்கும், 20 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம். யாருடனும் கூட்டணி கிடையாது.

இது என் நாடு, என் தேசம். தமிழ் தேசம் இது என் மொழி என்று யார் என்னுடன் வந்து என் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கடலூர் மண்டல பொறுப்பாளர் தமிழ், மாவட்ட தலைவர் ராம்கி, மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொறுப்பாளர் தமிழ் வளவன், சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா நம்பி, சிவக்குமார், செங்கோலன், மாவட்ட பொறுப்பாளர் அன்பரசன் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்