அனுமதி பெறாத குடோனுக்கு சீல்;1,400 பெட்டி பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி அருகே அனுமதி பெறாத குேடானுக்கு சீல் வைத்ததுடன் அதில் பதுக்கிய 1,400 பெட்டி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2023-10-21 00:17 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் சில நாட்களுக்கு முன்பு வெடிவிபத்து ஏற்பட்டு 12 பெண்கள் உள்பட 13 பேர் உடல் கருகி பலியானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தநிலையில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளுக்கான தனி தாசில்தார் சாந்தி மற்றும் அதிகாரிகள் நேற்று காலை பாறைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்று திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அந்த குடோனில் உரிய அனுமதி பெறாமல் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 1,400 பெட்டி பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த குடோனில் இருந்த பட்டாசுகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்க இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் கவனத்துக்கு கொண்டு சென்ற தாசில்தார் சாந்தி, பின்னர் குடோனுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனுமதி பெறாமல் இயங்கி வந்த பட்டாசு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. குடோனின் உரிமையாளர் சித்துராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்