உரிமம் பெறாமல் இயங்கிய 3 மரம் அறுக்கும் ஆலைகளுக்கு சீல்
பேரணாம்பட்டில் உரிமம் பெறாமல் இயங்கிய 3 மரம் அறுக்கும் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.;
பேரணாம்பட்டில் உரிமம் பெறாமல் மரம் அறுக்கும் ஆலைகள் இயங்குவதாக பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனவர் தயாளன், வனகாப்பாளர் ரவி, வன காவலர் சிவா மற்றும் வனத்துறையினர் பேரணாம்பட்டில் வீ.கோட்டா ரோட்டில் கோபால், சதீஷ்குமார், அப்துல் ரஹ்மான் ஆகிய 3 பேர் நடத்தி வரும் மரம் அறுக்கும் 3 ஆலைகளுக்கு திடீரென சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையில் மரம் அறுக்கும் ஆலைகளுக்கு வெளியூர்களில் நடத்த உரிமம் பெற்று அதனை பெயர் மாற்றம் செய்ய கோரி கடந்த 45 நாட்களுக்கு முன்பு வனத்துறையினருக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில் மரம் அறுக்கும் ஆலையை இயக்கி வந்ததது விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து வனத்துறையினர் அந்த 3 ஆலைகளின் எந்திரங்களுக்கு பேரணாம்பட்டு டவுன் கிராமநிர்வாக அலுவலர் அன்பரசன் முன்னிலையில் சீல் வைத்தனர்.