குளத்தில் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு `சீல்' வைப்பு

திருச்சி அருகே குளத்தில் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது. இதை கண்டித்து மாணவர்கள்-பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-06-12 19:04 GMT

திருச்சி அருகே குளத்தில் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது. இதை கண்டித்து மாணவர்கள்-பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

அரசு உதவிபெறும் பள்ளி

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூரில் அரசு உதவி பெறும் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 174 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். இப்பள்ளியின் தாளாளராக பார்வையற்றவரான அன்பரசன் உள்ளார்.

இதே பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். அதேபோல இப்பள்ளியின் அருகே தேவராஜ் என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வரும் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி உள்ளது.

இங்கு கடந்த கல்வியாண்டில் 44 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். சுமார் 45 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த 3 கல்வி நிறுவனங்களும் குளத்தில் புறம்போக்கு நிலத்தில் செயல்பட்டு வருவதாகவும், அப்பள்ளிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வருவாய்த் துறையினருக்கு புகார் சென்றது.

நோட்டீஸ்

இது தொடர்பாக வருவாய் துறை சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் குளத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை அகற்றும் கலெக்டரின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் செந்தில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ள 3 கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டது. அதன் பேரில் 3 பள்ளிகளையும் மூட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

`சீல்' வைப்பு

கடந்த ஏப்ரல் 30-ந் தேதிக்குள் பள்ளி கட்டிடத்தை காலி செய்து கொள்வதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் வரை காலி செய்யாமல் காலம்தாழ்த்தி வந்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் மதியம் கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்திரசேகரன் (தனியார் பள்ளிகள்) முன்னிலையில் வருவாய் மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் 3 கல்வி நிறுவனங்களையும் பூட்டி `சீல்' வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கோடை விடுமுறை முடிந்து பள்ளி மாணவ-மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். அப்போது, கல்வி நிறுவனங்கள் பூட்டி `சீல்' வைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே பள்ளி நிர்வாகத்தினர் அருகே பட்டா நிலத்தில் உள்ள மற்றொரு பழைய கட்டிடத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றனர்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அங்கு வந்து இந்த கட்டிடம் பழைய கட்டிடம். அங்கு பள்ளி நடத்துவதற்கு ஏற்ற சூழல் இல்லை. அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு பள்ளியின் முன்பு திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள செவல்பட்டி சாலையில் அமர்ந்து பள்ளிகளை திறந்து அங்கேயே படிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பெற்றோர்கள் தரப்பில் கூறும்போது, தங்களது குழந்தைகளை இங்கேயேதான் படிக்க வைக்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, கோர்ட்டு உத்தரவை மீறி நாங்கள் ஏதும் செய்ய முடியாது என்றனர். ஆனாலும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி அளவில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தங்களது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட முயன்றனர். ஆனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் அதிகாரிகளின் வாகனத்தை மறித்து எங்களுக்கு ஒரு முடிவு சொல்லாமல் இங்கிருந்து செல்லக்கூடாது என்று அவர்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பள்ளி வளாகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் பள்ளி மூடி `சீல்' வைக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை நாளை (இன்று) மதுரை ஐகோர்ட்டில் வருகிறது. இதே பள்ளியில் 6 மாதம் வரை வகுப்புகள் நடத்த அனுமதி வாங்கி விடுவோம். அதற்குள் மாற்று ஏற்பாடு செய்துவிடுவோம். ஐகோர்ட்டில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கல்வித்துறை அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்