920 கிலோ கடல் அட்டைகள் சிக்கின
மண்டபம் அருகே 920 கிலோ கடல் அட்டைகள் போலீசாரிடம் சிக்கின.;
பனைக்குளம்,
மண்டபம் அருகே 920 கிலோ கடல் அட்டைகள் போலீசாரிடம் சிக்கின.
கடல் அட்டைகள் கடத்தல்
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்தநிலையில் மண்டபம் அருகே ஒரு இடத்தில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே மண்டபம் போலீசார், மேற்குத்தெரு பள்ளிவாசல் அருகே பிலிப்ஸ் என்ற குலாம் முகமது என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த நஜிபு (வயது29), சுமார் 600 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகளை உயிருடன் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் 300 கிலோ எடையில் பதப்படுத்தப்பட்ட கடல் அடைகளும் இருந்தன.
விசாரணை
இதையடுத்து கடல் அட்டைகளையும் 5 கியாஸ் சிலிண்டர், 3 பெரிய பாத்திரங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வேதாளை தெற்குதெருவில் 20 கிலோ கடல் அட்டைகளை போலீசார் கைப்பற்றினர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனஞ்ஜெயன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் சென்று விசாரணை நடத்தினர். கடல் அட்டைகளை பதுக்கியவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.