தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அரசன் (வயது 45). தொழிலாளி. இவரது மனைவி அழகேஸ்வரி. இந்த நிலையில் சம்பவத்தன்று அழகேஸ்வரி, அரசனிடம் தற்போது ஜே.ஜே.நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அரசன் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அழகேஸ்வரி, தண்டலை கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரிடம் தனது கணவரை வெட்டி கொலை செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. இதையடுத்து விஜயன் அரிவாளால் அரசனை வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அழகேஸ்வரி மற்றும் விஜயன் ஆகிய 2 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.