இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;
அரிவாள் வெட்டு
திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் தவ்பிக் (வயது24). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாகுளம் கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று இரவு அப்பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் வந்து தவ்பிக்கை சுற்றி வளைத்து கொலை செய்யும் நோக்கத்தில் உடலில் 10 இடங்களிலும், தலையிலும் கொடூரமாக வெட்டினர். படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மறியல்
தவ்பிக் போதை பழக்கத்துக்கு எதிராக போராடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதை பிடிக்காத எதிரிகள் அவரை கொலை செய்யும் எண்ணத்துடன் அரிவாளால் வெட்டியிருப்பதாகவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய கோரியும் திருச்சி மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.