நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நடந்த மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
மாதிரி வாக்குப்பதிவு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்ட கலெக்டர்களும் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களின் முதல்நிலை சரிபார்க்கும் பணி நிறைவடைந்தது.
இந்த நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பழுதடைந்த எந்திரங்களை தவிர மீதமுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் 5 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதாவது மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்குப்பதிவு செய்து சான்று அளிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இந்த மாதிரி வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த மாதிரி வாக்குப்பதிவு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பணியினை பி.எச்.எல். பொறியாளர்கள் மற்றும் தேர்தல் பணிக்கென நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மேற்கொண்டனர்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவசுப்ரமணியன், ஆய்வுக்குழு அலுவலர் அபிநயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
======