கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு

கீரனூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-05 18:33 GMT

கீரனூர்:

மாணவி சாவு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஒடுகம்பட்டி சில்லத்துப்பட்டியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் -செல்லம்மாள். இவர்களது மகள் காளியம்பாள் (வயது 8) அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். வைத்திலிங்கம் இறந்து விட்டதால் கூலி வேலைக்கு செல்லும் தாயாருடன் விடுமுறை நாட்களில் காளியம்பாள் ஆடு மேய்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வழிதவறி சென்ற ஆட்டை விரட்டி கொண்டு காளியம்பாள் சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த தரைமட்ட கிணற்றுக்குள் மாணவி தவறி விழுந்தார். இதில் மூச்சுத்திணறி மாணவி பரிதாபமாக இறந்தார்.

மாணவியின் உடல் மீட்பு

இந்நிலையில், இரவு வரை மாணவி வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை எங்கு தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. சந்தேகம் அடைந்து ஆடு மேய்த்த பகுதியில் தேடிப் பார்த்தபோது மாணவி உடல் கிணற்றுக்குள் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், நிலைய அலுவலர் செல்லத்துரை தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறுகட்டி இறங்கி மாணவியின் உடலை மீட்டனர். அப்போது மாணவியின் உடலை பார்த்து அவரது தாயார் கதறி அழுதது அங்கு நின்றவர்களையும் கண்கலங்க வைத்தது.

சோகம்

இதையடுத்து கீரனூர் போலீசார் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்