பள்ளி வேனின் அவசரகால கதவு சாலையில் விழுந்ததால் பரபரப்பு

கூடலூரில் மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனின் அவசர கால கதவு கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.

Update: 2023-08-09 20:30 GMT

கூடலூர்

கூடலூரில் மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனின் அவசர கால கதவு கழன்று சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.

பள்ளி வேன்

காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் மாணவ-மாணவிகள் வீடு திரும்புகின்றனர். தனியார் பள்ளிகள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களில் மாணவர்களை அழைத்து சென்று வருகின்றனர். அந்த சமயத்தில் விபத்துக்குள்ளாகி மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை இருந்தது. இதையடுத்து ஆண்டுதோறும் மே மாதம் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்து உரிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதேபோல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் இயக்கப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் உறுதித்தன்மை மற்றும் தகுதியை சரிபார்க்கும் பணி கூடலூரில் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் கூடலூர் தனியார் பள்ளி வேனில் மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவசரகால கதவு விழுந்தது

கூடலூர் 1-ம் மைல் பகுதியில் சென்ற போது, பள்ளி வேனின் பின்பக்கத்தில் இருந்த அவசர கால கதவு திடீரென கழன்று சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில் மாணவர்கள் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். பின்னர் சத்தம் கேட்டு நிலைமையை உணர்ந்த டிரைவர் வேனை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். தொடர்ந்து சாலையில் கிடந்த அவசர கால கதவை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வேனை ஓட்டிச் சென்றார். இந்த சம்பவத்தால் வேனில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக கீழே தவறி விழாமல் உயிர் தப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எனவே, பள்ளி வாகனங்களை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்