வெம்பக்கோட்டை அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
வெம்பக்கோட்டை அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.;
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பள்ளி மாணவன்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் யோகேஸ்வரன் (வயது 16). வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இவர் நேற்று பள்ளி முடிந்ததும் மாலையில் நண்பர்களுடன் வெம்பக்கோட்டை அணைக்கு குளிக்க சென்றான்.
அப்போது திடீரென யோகேஸ்வரன் நீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் யோகேஸ்வரனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடல் மீட்பு
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணையில் மூழ்கிய மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அணையில் 3 அடி உயரத்திற்கு சகதி இருந்ததாலும், இரவு நேரமாக இருந்ததாலும் உடலை தேடுவதில் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். மீன் பிடிக்கும் தொழிலாளிகளும், இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களும் தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு மாணவனின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் மாணவனின் உடல் பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் அணையில் மூழ்கி இறந்த சம்பவம் வெம்பக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.