பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் தற்கொலை முயற்சி: விஷம் அருந்தி கொண்டே கண்ணீர் மல்க பேசும் வீடியோ வைரல்
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் விஷம் அருந்தி கொண்டே கண்ணீர் மல்க பேசும் வீடியோ வைரலானது.;
ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள ஏஞ்சல் என்ற தனியார் பள்ளியின் தாளாளர் வினோத் (வயது 34). இவர், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து தங்களது பெற்றோருடன் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவுகளின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட பள்ளி தாளாளர் வினோத் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர், "நான் எந்த தவறும் செய்யவில்லை. இது மாணவ-மாணவிகளுக்கு தெரியும்" என்று கூறியதுடன், ஒரு சில ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளின் பெயரை குறிப்பிட்டு அவர்களை புகழ்ந்து அறிவுரைகள் வழங்குவது போல் பேசியுள்ளார்.
மேலும் மாணவர்களின் தாய், தந்தையை குறிப்பிட்டு "என்னை தப்பா நினைக்காதீங்க. நான் எந்த தப்பும் பண்ணல" என கண்ணீர் மல்க பேசி உள்ளார். வீடியோ பதிவில் தன் மீது தவறான குற்றச்சாட்டு வைத்து தன்னை சிதைத்து விட்டதாக கூறி, பூச்சி மருந்தை வாயில் அடித்து கொண்டே நான் போறேன். நான் பிழைக்க மாட்டேன். ஏற்கனவே மருந்து சாப்பிட்டேன். சாகல" என பேசி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.