புதுமை பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாக மாணவிகளுக்கு உதவித்தொகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாக 3,112 மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்காக வங்கி பற்று அட்டையை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.;

Update: 2023-02-08 16:36 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாக 3,112 மாணவிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்காக வங்கி பற்று அட்டையை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

புதுமை பெண் திட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு 2-ம் கட்டமாக மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை கருணாநிதி அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் புதுமைப் பெண் திட்டத்திற்கான மாணவிகளுக்கு வரவேற்பு கோப்புறை மற்றும் மாதந்தோறும் ரூ.1,000 உதவி தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும்

இத்திட்டத்தில் 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் அவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி முடிக்கும் வரை அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. வளர் இளம் பருவத்தில் திருமணம் செய்து கொள்வதால் பெண்கள் பல்வேறு உடல் மற்றும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். எனவே குழந்தை திருமணத்தை பெண்கள் தவிர்க்க வேண்டும். பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் முதல் கட்டமாக 5,697 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது 2-ம் கட்டமாக 3,112 மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் ேநரடியாக பெறும் பொருட்டு பற்று அட்டை மற்றும் வரவேற்பு கோப்புறையும் விழாவில் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் கந்தன், கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி முதல்வர் கே.பி.கணேசன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்