பகல்நேர பருவநிலையை மாற்றிய சாரல் மழை

திண்டுக்கல்லில், சூரியனை மறைத்து வெயிலை மேகமூட்டம் தடுத்தது. பகல்நேர பருவநிலையை சாரல் மழை மாற்றியது.

Update: 2022-10-29 16:15 GMT

தமிழகத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும் ஊர்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். இங்கு கோடைகாலம் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தாலும் பகலில் வழக்கமான வெயில் விளாசியது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. சூரியனை மேகமூட்டம் மறைத்ததால், அதன் வெப்ப கதிர்கள் பூமியில் விழவில்லை.

மேலும் காலை பொழுதில் ஆடை எளிதில் நனையாத அளவில் லேசான தூரல் விழுந்தபடி இருந்தது. பின்னர் அதுவே சாரல் மழையாக மாறியது. அதோடு விட்டுவிட்டு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் மக்கள் குடையை பிடித்தபடி அன்றாட பணிகளை மேற்கொண்டனர். எதிர்பாராமல் பெய்த சாரல் மழையில் நனையாமல் இருக்க ஒருசிலர் தலையில் துணியால் மூடியபடி சென்றனர்.

பகல் முழுவதும் வெயில் முகம்காட்டாத நிலையில் சாரல் மழை பெய்ததால், வழக்கமான வெப்பம் இல்லாமல் இதமான குளிர் நிலவியது. அதோடு மெல்லிய சாரல், உடலை ஊடுருவும் குளிர் என திண்டுக்கல்லின் வழக்கமான பகல்நேர பருவநிலை முற்றிலும் மாறியது. இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் சாரல் மழையில் உற்சாகமாக நனைந்தபடி நகரில் வலம் வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்