இணையதளம் மூலம் மோசடிகள்; தென்காசியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
இணையதளம் மூலம் மோசடிகள் நடப்பதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தென்காசியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
இணையதளம் மூலம் மோசடிகள் நடப்பதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தென்காசியில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
ஆய்வு செய்தார்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று (வியாழக்கிழமை) தென்காசி வருகிறார்.
இதையொட்டி முதல்-அமைச்சர் வரும் பாதை, தங்கும் இடம், விழா நடைபெறும் கணக்கப்பிள்ளை வலசையில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானம், மேடை, பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று மாலை ஆய்வு செய்தார்.
பாராட்டு சான்றிதழ்
பின்னர் பள்ளி வளாகத்தில், சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டவர்களை திறமையாக செயல்பட்டு கைது செய்த போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து நிருபர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது இணையதளம் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. அரசுத்துறை நிறுவனங்களிலோ அல்லது தனியார் துறை நிறுவனங்களிலோ உயர் அதிகாரிகளின் பெயரை கூறி வாட்ஸ்-அப்பில் அதிகாரி பணம் கேட்பதாக அவருக்கு கீழ் பணிபுரிபவரிடம் கேட்கிறார்கள். அவர்களும் நம்பி பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைகிறார்கள்.
மோசடியால் ஏமாற்றம்
உதாரணமாக கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்களின் குரலில் பேசுகிறார்கள். எந்த அதிகாரியும் யாரிடமும் பணம் கேட்பதில்லை. இதுபோன்று ஒரு குற்றச்செயலில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேரை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.
இதே போன்று வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். எண்ணையும் கேட்டு வாங்கி அதன் மூலமாகவும் பண மோசடி நடைபெறுகிறது. எந்த வங்கியில் இருந்தும் ஏ.டி.எம். எண், வங்கி கணக்கு எண் எதையும் கேட்க மாட்டார்கள். படித்தவர்களும் சரி படிக்காதவர்களும் சரி இந்த மோசடியில் ஏமாந்து விடுகிறார்கள்.
காத்து கொள்ள வேண்டும்
இந்தியாவிற்குள் எங்கு சென்று வேண்டுமானாலும் குற்றவாளிகளை கைது செய்து விடலாம். ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு, ஒரு தீவில் இருந்து கொண்டு கூட இங்கு உள்ளவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். வெளிநாட்டுக்காரர்களை பிடிப்பது கடினமான விஷயம்.
எனவே வருமுன் காப்போம் என்ற நிலையில் குற்றம் நடப்பதற்கு முன்பு நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.