சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் பண மோசடி
நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைனில் அறை களை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைனில் அறை களை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் பண மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறை முன்பதிவு
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். அவர்கள் ஆன்லைன் மூலம் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்கின்றனர். இவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் பணம் மோசடி செய்வதாக புகார் எழுந்து வருகிறது.
இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலிப் கூறியதாவது:-
கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் அறை முன்பதிவு செய்வார்கள் என்பதை தெரிந்து கொண்ட மோசடி பேர்வழிகள், இங்கு ஏதாவது ஒரு பெயரில் ஓட்டல்கள் இருப்பது போல ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வார்கள். மேலும் சர்ச் எஞ்சின் ஆப்டிமிசேஷன் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூகுளில் யாராவது ஊட்டியில் அறை உள்ளதா என்று தேடினால், இவர்கள் போலியாக உருவாக்கிய முகவரி, வங்கி கணக்கு எண் விவரங்கள் முதலில் வரும்படி செய்து விடுகின்றனர்.
பணம் மோசடி
தொடர்ந்து அறை முன்பதிவு செய்து, அந்த வங்கி கணக்கு எண் மூலம் சுற்றுலா பயணிகள் பணம் செலுத்துகின்றனர். பின்னர் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட ஓட்டலுக்கு செல்லும்போது மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வருகிறது. இதேபோல் பலரும் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அவர்கள் புகார் கொடுத்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும். இதுவரை 10 ஓட்டல் நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் ஏமாற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்து வலைதள நிறுவனத்திற்கு புகார் அளித்து அந்த போலி இணையதள முகவரியை நீக்கம் செய்ய அறிவுறுத்தி கடிதம் கொடுத்துள்ளோம். அதேபோல் இணையதளம் மூலம் பணம் செலுத்தி அறை முன்பதிவு செய்யும் சுற்றுலா பயணிகள் அந்த ஓட்டலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.